
இரவு மணி பதினொன்றை தாண்டியது..தெருவினில் ஆள் நடமாட்டம் அதிகமில்லை..சாலையோர டீக்கடையில் எப்.எம்.மில் "நினைத்தாலே இனிக்கும்" ஓடிக்கொண்டிருக்கிறது.தன்னுடைய பாத்திரங்களை தெருவில் போட்டு விளக்கிக்கொண்டிருந்தான் டீக்கடைக்காரன்..அதன் கழிவுநீர் ரோட்டினை அசுத்தப்படுத்திக்கொண்டிருந்தது..தன் நிழலை பார்த்தவாறே நடந்து வந்தான் கண்ணன்..தெருவின் கடைசியில் உள்ள மின்விளக்கு அவனுக்கு வழிகாட்டியது..கழிவுநீரை தாண்ட முயற்சி செய்கையில் இரண்டு நாளாக இப்போ பிய்ந்துவிடும் பிறகு பிய்ந்துவிடும் என்ற நிலையில் இருந்த செருப்பு அவன் வீட்டருகில் யாரும் இல்லாத வேளையில் அறுந்து போனது மனதுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது..
செருப்பினை கையில் பிடித்தவாறே வீட்டினை நோக்கி நடக்கலானான்..வீட்டின் முன் நின்றான்..கதவினை தட்ட மனம் வரவில்லை..கண்களிலே கண்ணீர்தான் வந்தது.நிலையினை பிடித்தவாறே நின்றான்..திடீரென கதவினை திறந்தாள் அக்கா வாசுகி..
எவ்வளவு நேரமா வெளியில நிக்கிறடா..??
கதவினை தட்டவேண்டியதுதானா.??
கேள்விகளுக்கு பதில் எதுவும் சொல்லாமல் வீட்டினுள் நுழைந்தான் கண்ணன்..
இந்த சத்தங்களுக்கு இடையே அப்பா கண்முழித்தார்..கண்ணா வந்துட்டியா..காலாகாலத்துலே சீக்கிரமா வரலாம்ல..பொம்பிளைப்புள்ளை எவ்வளவு நேரமா முழிச்சுக்கிட்டு இருப்பா..??
தட்டினில் சாதத்தினை வைத்து அவனை சாப்பிடச்சொன்னாள் வாசுகி..
எனக்கு சாப்பாடு வேண்டாம்..
ஏன்டா..துரை சாப்பிட்டு வந்திங்களோ..???
இல்லை..
பின்ன என்ன..??
பசிக்கலை..
ஆமா காலையில வேலை விஷயமா போனியே என்ன ஆச்சு..
கிடைக்கலை...
சரி விடுடா..நீ சாப்பிடு உனக்கு நல்லா வேலையா சீக்கிரமா கிடைக்கும்..
வருகிற வழியில் சுரேஷ் மாமாவை பார்த்தேன்..
என்ன சொன்னார்..அவர் மகனுக்கு வேலை கிடைச்சிருச்சாமே..
நாளைக்கு திருப்பூருக்கு போகச்சொன்னார்..அங்கே அவருக்கு தெரிந்த நண்பரிடம் வேலைக்கு சேர்த்துவிடுகிறேன் என்றார்..
சரி போயிட்டு வாடா..போக காசு வைத்திருக்கிறாயா என்று அவன் சட்டைப்பைக்குள் கையை நுழைத்தாள்..கிழிந்து போன ஐந்து ரூபாய் நோட்டு மட்டுமே இருந்தது..இரு வருகிறேன் என்று தன் வளையல் டப்பாவுக்குள் எட்டு மடிப்பாக வைத்திருந்த ஐம்பது ரூபாய் தாளை நீட்டினாள்..
என்னடா பாக்குற..நீ கொடுத்ததுதான்.போன தீபாவளிக்கு கொடுத்தியே அந்த காசுதான்..
கண்களில் நீர் மல்க அவள் மடியினில் சாய்ந்தான் கண்ணன்..ஆறுதல் கூறியவாறே அழுது கொண்டிருந்தாள் அவள் அக்கா வாசுகி..
கரையும் உருவங்கள்..
முக்கோணக்காதல்....
இவளின் வழக்கத்திற்கு மாறான அலப்பரையை பார்த்து வியந்து போய் "எங்கடி கிளம்பிட்ட" என்றாள் ராணி.
"ஒரு வாரமா என் பின்னால சுத்திக்கிட்டு இருந்தானே.. கார்த்திக், நேத்து பக்கத்துல வந்து உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..நாளைக்கு தாஜ் ஹோட்டலுக்கு வரமுடியுமா? என்று கேட்டான்.. "
" நீ என்னடி சொன்ன?" என்றாள் ராணி..
"வரேன் என்று சொல்லிட்டேன்....
" அப்போ கார்த்திக்கை காதலிக்கிறாயா?"
" ஆமாம்.. "
"அப்போ ராஜாவின் நிலைமை??"
"அவன் என்னை காதலிப்பது நம்ம காலேஜூக்கே தெரியும்..இருந்தாலும் வந்து சொல்லமாட்டேன்கிறான்..அவன் என்னிக்கு வந்து என்கிட்ட சொல்லி...எனக்கு டைம் ஆச்சு நான் புறப்படுகிறேன்.. அப்புறம் இந்த சுரிதார் எனக்கு எப்படி இருக்கு?"
"ம்ம்ம்..நல்லாத்தான் இருக்கு.. "
கார்த்திகாவும் ராணியும் கல்லூரி தோழிகள்..இருவருக்கும் ஒரே விடுதி..ஒரே அறை..இருவரும் ஒன்றாகவே கல்லூரிக்குச்செல்வர்..
அவசர அவசரமாக ஆட்டோ பிடித்து தாஜ் ஹோட்டலுக்கு சென்றடைவதற்குள் அறை மணி நேர தாமதம்..இருந்தாலும் கார்த்திக் எங்கு இருக்கிறான் என்று நோட்டமிட்டாள்..சிவப்பு நிற டி-ஷர்ட்டில் மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தான்.. இருவரும் பார்த்தவுடன் தங்களுக்குள் ஒரு புன்னகை..
கார்த்திக் அருகில் சென்று "வந்து ரொம்ப நேரம் ஆச்சா..?? "
"இல்லை 15 நிமிடம் தான்.. "
கார்த்திக் "ஐ லவ்" என்று ஆரம்பிக்க, சர்வர் "என்ன மேடம் வேணும்? " என்று சொல்ல..கார்த்திக் சிறிது அமைதியானான்..
"இரண்டு வெண்ணிலா.." என்று ஆர்டர் பண்ணிவிட்டு..
" கார்த்திகா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல.. ரொம்ப பயமா இருக்கு.. அதுக்காக சொல்லாமலும் இருக்க முடியாது.. " என்று தயங்கினான்..
"பரவாயில்லை பயப்படாம சொல்லுங்க " என்றாள் கார்த்திகா.. தன் மேலான அவன் காதலை அவன் வாயாலையே சொல்வதை கேட்க..
கார்த்திக் மெல்ல தயங்கி, "நான் உங்க பிரண்ட் ராணியை... ராணியை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்..அவங்க இல்லாமல் என்னால் இருக்க முடியாது..கிட்டதட்ட மூன்று வருஷமா அவங்களை காதலிக்கிறேன்..வாழ்ந்தா அவங்ககூடத்தான் வாழனும் என்று ஆசைப்படுறேன்..ஆனா அவங்ககிட்ட சொல்ல தைரியம் இல்லை..மேலும் சொன்னா என்னுடைய நிராகரித்துவிடுவார்களோ என்ற பயம்தான்..நீங்க தான் அவங்ககிட்ட பக்குவமா பேசி என்னுடைய காதலை சொல்லணும்" என்றான்..
இதை சற்றும் எதிர்பாராத கார்த்திகாவுக்கு சிறிது வியர்த்தாலும் சுதாரித்துகொண்டு "ம்ம் கண்டிப்பா சொல்றேன் " என்று கிளம்பினாள்..
இவளா...இப்படி...!!
இந்த அபார்ட்மெண்டிற்கு குடி வந்து இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை..சித்ரா யாருடன் பேசிக்கொண்டிருக்கிறாள் என ஆச்சர்யமாய் கவனித்தான் சரவணன்.
ஒரு பிரபல பதிவரின் காதல் ஏக்கங்கள்..!!!

முதலில் இக்கதையின் கதாநாயகனை பற்றிய ஒரு சிறு குறிப்பு:-
என்னைப்பற்றி சொல்ல ஒண்ணுமில்லைங்க..நல்ல பையன், அப்பாவி, வெள்ள சோறு, புள்ள பூச்சி.. இப்படி என்ன பத்தி எங்க ஊர்ல சொல்லுவாங்க.. ஆனா உண்மையில நான் ரொம்ப கெட்டவன் என்று எனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. மேலும் சொந்தமாக ஒரு Browsing Centre வைத்து நடத்தி வருகிறேன்.
ஒரு மாலை நேரப்பொழுது..மணி சரியாக தெரியாவிட்டாலும் கதிரவன் வானத்திற்கு விடைகொடுத்துக்கொண்டிருந்தான்..அந்த அழகினை மெல்ல ரசித்துக்கொண்டிருந்தேன்..'இயற்கையின் அழகே தனிதான்'என்று மனதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.
தூரத்தில் ஒரு வெண்ணிலவு நடந்து வந்தது..என்னடா இது இன்னும் கதிரவன் மறையவே இல்லை..அதற்குள் வெண்ணிலவா..ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருக்கையில்...
சார்..மணிக்கு எவ்வளவு ரூபாய்?..
சுய நினைவுக்கு வந்தவனாய்...பத்து ரூபாய் மேடம்
இந்தாங்க..
பணத்தை வாங்கியவுடன் என் மனது ஏனோ திரும்பி பார்க்க சொல்லி கட்டளையிட்டது..
திரும்பிப் பார்த்தவுடன்..கருப்பு நிற சுடிதாரில் ஒரு வெண்ணிலவு ஒளிந்து கொண்டிருந்தது.. Browsing பண்ணனும்...
ம்ம்..எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பண்ணுங்க..
மணிக்கு எவ்வளவு ரூபாய்?
ஐந்தே ரூபாய் தான் மேடம்..
ரொம்ப கம்மியாக இருக்கு..
ஆடித்தள்ளுபடி அதான்..ஒரு புன்சிரிப்புடன்..
அந்த சிஸ்டத்தில் உட்காருங்க மேடம்...
சார் இந்த சிஸ்டம் வொர்க் பண்ணலை..
ச்செ..இது வேற மக்கர் பண்ணுது..என்று மனதிற்குள் புலம்பினவனாய்..
நீங்க இந்த சிஸ்டத்தில் உட்காருங்க மேடம்..
சரி..
Browsing பண்ணி முடித்ததும் என் அருகில் வந்து இந்தாங்க..என்று 100 ரூபாயை நீட்டினாள்..
சில்லரை இல்லை மேடம்..அடுத்த முறை வரும் போது நான் வாங்கிக்கிறேன்..
அவளோ என்னை ஒரு முறை ஏற இறங்க பார்த்துவிட்டு சென்றாள்..
என்னடா நடக்குது இங்க..என் நண்பன் கேட்டான்..
சும்மாதான்டா..அந்த பொண்ணு அழகா இருக்காடா மச்சி..அதுவும் அவளோட அந்த தெத்துப்பல் அழகுக்கே அழகு சேர்ப்பது போல் உள்ளதுடா..
உனக்கு என்னமோ ஆச்சு..உட்கார்ந்து வேலையைப் பாருடா..
மறுநாள் மாலை..
அவளுக்காக நான் காத்திருக்க..
இம்முறை அனைத்து சிஸ்டம் வேலை செய்கிறதா என்று செக் பண்ணினேன்..
நினைத்தது போலவே அந்த அழகு தேவதை வந்தாள்..ஒரு புன் சிரிப்புடன்
Browsing பண்ணி முடித்தவுடன் சரியான சில்லறையை கொடுத்துவிட்டு தான் கொண்டு வந்த வண்டியை ஸ்டார்ட் பண்ணினாள்..வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை..ஒருமுறை இருமுறை என கணக்கில்லாமல் மிதித்து கொண்டிருப்பதை நான் ரசித்து கொண்டிருந்தேன்..நான் அந்த வண்டியாக இருந்திருக்க கூடாதா? என்ற எண்ணம் என் மனதில் அலைபாயாமல் இல்லை..
கிட்ட போய்..anyhelp என்றேன்..
ya என்றாள்..
உடனே நான் ஹீரோயிசத்தினை காட்ட ஆரம்பித்தேன்..தோல்வியே கிடைத்தது தவிர வெற்றி கிட்டவில்லை..இறுதியில் ஒரு ஐந்து நிமிடம் வெயிட் பண்ணுங்க மேடம்..மெக்கானிக் வரச்சொல்றேன் என்றேன்..
மெக்கானிக் வந்து சரி பண்ணும் வரை அவளுடன் கலாய்த்துக்கொண்டிருந்தேன்..தான் காலேஜ் படிப்பதாக கூறினாள்..கஷ்டப்பட்டு அவளுடைய மொபைல் நம்பரை வாங்கிக்கொண்டேன்..
அன்று முதல் நாங்கள் எஸ்.எம்.எஸில்.பேசத்தொடங்கினோம்
அவள் : "Don't miss or avoid d person who really had a true affection on u. it may make u feel when they live without u and your memories....."
அவசர அவசரமாக பதிலளித்தேன்..
"hey... what a surprise... எப்படி இருக்கே? சாப்டாச்சா? "
அவள்: ஓ சாப்டாச்சு.. நீ சாப்டயா.. வீட்டுக்கு வந்தாச்சா..
சாப்டாச்சு.. ஆனா இன்னைக்கு வீட்டுக்கு வரல.. ஆபிஸ்லதான் இருக்கிறேன்..
அவள்: ஏன்பா???
கொஞ்சம் அவசர வேலை இருக்கு.. நாளைக்குள்ள முடிக்கணும்.. அதுதான்..
அவள்: சரி.. continue பண்ணு.. Good night.. Sweet dreams.. bye..
ஒரு ஸ்வீட்டே ஸ்வீட் ட்ரீம்ஸ் சொல்லுதே...
அவள்: ரொம்ப ஐஸ் வைக்காத.. வேலைய பாரு..
ஐஸ் கிரீமுக்கே யாரவது ஐஸ் வைக்க முடியுமா...
அவள்: ஐயோ முடியல... நா தூங்க போறேன்..
கனவுலையும் என் கூடத்தான் பேச போற.. அதுக்கு இப்பவே பேசலாம்ல..
அவள்: ஆசைதான்.. டைப் பண்ணி முடிச்சுட்டு சீக்கிரம் தூங்குடா.. Bye..
சரிங்க மேடம்.. Good night...
நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து சோம்பல் முறித்தேன்.. கற்பனையில் கொஞ்ச ஆரம்பித்தேன்..
ஸ்பீக்கரில்
"காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை..
காதல் இன்றி யாரும் இங்கில்லை..." யேசுதாஸ் பாடி கொண்டிருந்தார்..
அப்படியே தூங்கி போனேன்..
டிஸ்கி:- 1.இது முழுக்க முழுக்க ஒரு பிரபல பதிவரை சார்ந்த காதல் கசமுசாக்கள்..
2.நான் கதை என்று நினைக்கிறேன்..நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்..
நம்பிக்கை..!!(சிறுகதை போட்டிக்காக..)
அந்தத் தெருவாசிகளின் இயல்பு வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காத அந்த தெருக்குப்பை கண்ணனை மட்டும் என்னவோ செய்தது.
தன் வீட்டு முற்றத்தில் நின்று பல்துலக்கிக் கொண்டே தெருவினை நோட்டமிட்டான்.முதல் வீடான ஆடிட்டர் வீட்டிலிருந்து ஒரு இருபது உள்ளடக்கியது அந்த தெரு.அதிகாலை நேரத்திலேயே அனைத்து வீடுகளின் முற்றங்களிலும் தண்ணீர் தெளிக்கப்பட்டு கோலம் வரையப்பட்டிருந்தது.
ஆனால் முற்றங்கள் தவிர்த்த அந்த நடைபாதை ஒரு இருபதடி நீளத்துக்கு சுத்தம் செய்யப்படாமல் தூசியும் குப்பைகளுமாய் இருந்தது.அந்தப்பாதையிலே தான் அனைவரும் போய் வந்து கொண்டிருந்தார்கள்.யாருக்குமே அதை சுத்தம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் தோன்றவில்லை.அப்படியிருக்க தனக்கு மட்டும் ஏன் இப்படி தோன்றுகிறதென்று தன்மேலேயே எரிச்சல் கூட வந்தது கண்ணனுக்கு..
தன் வீட்டு வாசலில் சின்ன அடுப்பு வைத்து பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தாள் கண்ணனின் அக்கா.தண்ணீர் பிடித்துக் கொண்டும் சமையல் செய்து கொண்டும் குறுக்கும் நெருக்குமாய் நடந்து கொண்டிருந்தாள் கண்ணனின் மனைவி.
வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த கண்ணனை பார்த்து கேலியாய் சிரித்தபடி "என்னடா இன்னிக்கு தெருவை சுத்தம் பண்ணலியா"என்றாள் அக்கா
அதைத்தான் செய்யப்போகின்றேன்.நான் இரண்டு நாள் ஊரில் இல்லை அதுக்குள்ள எவ்வளவு குப்பையாப் போச்சு நம்ம தெரு.நான் இல்லைன்னா யாராச்சும் பெருக்குவாங்கன்னு நினைச்சேன்..
ம்ம்..அதைப்போயி யாரு பெருக்கிட்டு இருப்பா?..வேற வேலை இல்லையாக்கும்.என்றாள் மனைவி..
எனக்கு மட்டும் வேற வேலையில்லையா என்ன?..
உங்களை யாரு அதை எல்லாம் செய்ய சொன்னா?...பேசாமா இருக்க வேண்டியதுதானா...
என்னால் அப்படியிருக்க முடியவில்லை. அதைப்பார்க்கும் போதெல்லாம் அது வெறும் குப்பையாக மட்டும் தெரியவில்லை.நம்முடைய அலட்சியத்தையும்,பொறுப்பின்மையும்,புறக்கணிப்பையும் எதிரொலிக்கின்ற பொருளாகத்தான் தெரிகின்றது.
உங்களுக்கு அப்படித்தான் தெரியும்..நடந்து போகின்றவர்களெல்லாம் மனுஷன் இல்லை..
பிள்ளைங்க எல்லாம் எந்திருச்சிட்டாங்களா?... இல்லையா?..
எல்லாரும் எந்திருச்சாச்சு.உள்ள வாங்க..காபித்தண்ணி குடிச்சிட்டு எங்க வேணாலும் போங்க..
நம்ம மக ஸ்கூல்ல படிக்க வேற செய்றா..அவளாச்சும் அந்த இடத்தை சுத்தம் பண்ணலாம்..
அப்பா..என்னை ஏன் வம்புக்கு இழுக்குற..இப்ப சுத்தம் பண்ணா அப்படியே இருக்கப் போகுதா?..
எதையாவது சொல்லி தட்டிக் கழிச்சிடுங்க..அவங்க அவங்க பயன்படுத்துற வீடு மட்டும் எவ்வளவு அழகாக இருக்கு.ஆனா நிறையப்பேரு பயன்படுத்துற இந்தப்பாதை மட்டும் ஏன் இப்படி இருக்கணும்?..
சொன்ன வேகத்திலேயே ஒரு துடைப்பத்தையும் அட்டையும் எடுத்துட்டுப்போய் தெருவை சுத்தம் செய்து அந்தக் குப்பையை அள்ளி ஒரு குப்பைத்தொட்டியில் போட்டு விட்டு வந்தான் கண்ணன்..
"இப்ப நிம்மதியாக்கும் உங்களுக்கு" என்றாள் மனைவி
என்னமோ தெரியவில்லை..எனக்கு அந்த நடைபாதையை பார்க்கும் போதெல்லாம் அது என்கிட்டே மட்டும் ஏதோ சொல்ற மாதிரி இருக்கு..
அது என்னவென்று சொல்லட்டுமா அப்பா..வீட்டுக்குள்ளே இருந்து காபி தம்ளரை கையில் பிடித்தபடி வந்தான் மூத்த மகன்...
என்ன? என்றான் கண்ணன்..
"ஒரு ஆளு பயன்படுத்துற வீடு நல்லா இருக்கும்..நிறைய பயன்படுத்துற நான் எப்படி இருக்கேன்னு பார்த்தியா?"என்னைப் போலத்தான் நீயும்.."நாலு பிள்ளைங்க இருந்தாலும் யாரும் உன்னைக்கவனிக்க மாட்டாங்க" என்று சொல்லி இருக்கும்..நான் சொல்றது சரியா அப்பா?
"மனசுல உள்ளதை அப்படியே சொல்லிட்டானே"..என்று மகனை வியப்பால் பார்த்தபடி நின்றான் கண்ணன்..
நீ ஒன்னும் கவலைப்பட தேவையில்லை அப்பா..நாங்க அப்படியெல்லாம் உங்களை கவனிக்காம விட்டுவிட மாட்டோம்.
அதை எப்படிடா நம்புவது?
சரி..நாளையிலேருந்து நாங்களே இந்த தெருவை சுத்தம் பண்ணுகிறோம் போதுமா?
ம்ம்..இப்ப தாண்டா உங்க மேல எனக்கு நம்பிக்கை வருது.
உங்களை வயசான காலத்துல நல்லா கவனிப்போம் என்றா..
இல்லைடா..நாட்டில் உள்ள பொதுச்சொத்தை நம்ம சொத்தா நினைச்சு பாதுக்காக்கிற யாருமே குடும்பத்தையும் நல்லா கவனிச்சிப்பாங்க..ஒவ்வொரு குடும்பமும் நல்லா இருந்தா இந்த நாடு என்ன உலகமே நல்லா இருக்கும்..என்றான் கண்ணன்..அவர் குரலில் திருப்தியோடு நம்பிக்கையும் ஒலித்தது..
{'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது }
காதல் படுத்தும் பாடு!!

தன் காதல் கடிதத்தை சாந்தியிடம் நீட்டினான் சக்தி..அவளும் அக்கடிதத்தை எதிர்பார்த்து இருந்திருப்பாள் போல..அவன் கொடுத்தவுடன் பெண்ணுக்கே உரிய வெட்கத்துடன் தலைகுனிந்து வாங்கிச்சென்றாள்.இவனுக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி.என்ன செய்வதென்று தெரியவில்லை..ரோட்டில் தானாவே சிரித்தான்..அவனது கால்கள் ரோட்டில் ஆட்டம் போட்டுக்கொண்டே சென்றன..என்ன சொல்லப்போகிறாள் தெரியவில்லையே..மறுநாள் காலையில் தான் அவளை சந்திக்க இயலும்..ஓ.கே சொல்லிடுவாளா?
அன்றிரவு அவனுக்கு உறக்கம் வரவில்லை..நண்பர்களை தொலைபேசியில் அழைத்தான்..அனைவரும் வழக்கம் போல் கட்டைச்சுவரில் கூடினர்.
என்னடா மாப்ள..அவசரமா வரச்சொன்ன..
சும்மாதான்டா..
சொல்லேண்டா..10.00 மணியாச்சு தூங்கணும்
ஒண்ணுமில்லைடா இன்னிக்கு சாந்திக்கு லவ் லெட்டர் கொடுத்தேன்டா..
என்னடா சொன்னா..
காலையில சொல்றேன் சொன்னாடா..
மச்சி கலக்கிறடா..சரிடா காலையில பார்ப்போம்.
இருடா எனக்கு தூக்கமே வரலைடா..கொஞ்சம் பொறுடா.
எனக்கு தூக்கம் வருதேடா..அவ உனக்கு தான் மச்சான் கவலைப்படாதே..போய் தூங்குடா..
பிரியா மனதுடன் விடை பெற்று சென்றான்..
இரவு உறக்கம் வரவில்லை..தீடிரென விழித்தான்..அதிகாலை 4.00 மணி..விடியலை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தான்..கிழக்கில் சூரியன் மெல்ல உதிக்க ஆரம்பித்தான்.மிக ஆர்வத்துடன் கல்லூரிக்கு கிளம்ப தயாரானான்.அவனிடம் இருப்பதிலே மிகவும் நல்ல ஆடையை அணிந்தான்..தலையை நூறு முறை சீவியும் அவனுக்கு அழகாக தெரியவில்லை..ஒருமனதாக கல்லூரிக்கு கிளம்பினான்..
மிகவும் ஆவலுடன் கல்லூரியின் வாசலை எதிர்நோக்கி இருந்தான்.மணி 9.00 ஆகியும் வரவில்லை..அவள் தோழிகளிடம் விசாரித்தான்..அனைவரும் தெரியவில்லை என்றே பதில் கூறினர்..மனம் உடைந்து போனான்..
யாரோ ஒருவர் ஓடி வருவதை உணர்ந்த அவன் திரும்பிபார்க்க..சாந்தி மூச்சிரைக்க ஓடி வந்தாள்..அவளைக்கண்டதும் அவன் மகிழ்ச்சியில் திளைத்தான்.
அவளிடம் இருந்து ஒரு வார்த்தைக்காக மிகவும் ஏங்கினான்..
அவளோ ச்.சீ போடா என்று சிணுங்கியபடி வகுப்புக்குள் ஓடினாள்..இவன் மனதுக்குள் ஒரு ஆயிரம் சூர்யா வந்துவிட்டது போல் துள்ளிகுதித்தான்..
துள்ளி குதித்ததில் அவனை அறியாமல் படுக்கையறையிலிருந்து கீழே விழுந்தான்..
என்னவளின் புகைப்படம்:[2]

இதன் முந்தைய பதிவினை படிக்காதவர்கள் இங்கே கிளிக்கி படிக்கவும்:
அவள் வேறு யாரும் இல்லை என்னை பத்து மாதம் கருவில் சுமந்து பெற்றெடுத்த அன்னையே..
புகைப்படத்தை கண்டவுடன் என்னுள்ளே பல நிகழ்வுகள் நகர ஆரம்பித்தது.நானும் என் அன்னையும் முதன் முதலாக சேர்ந்து எடுத்த புகைப்படம் அது..எனது பள்ளிக்காலங்களில் மிகவும் இரசித்த புகைப்படம்.நான் மதிப்பெண் குறையும் போதெல்லாம் எனக்கு தைரியம் கொடுத்த புகைப்படம்..
நான் என் அப்பாவின் முகத்தை பார்த்ததில்லை.பார்க்கவும் முடியாது.நான் பிறந்து ஒரு வருடத்திலே அவர் இறந்துவிட்டார்.நான் பிறந்தது சென்னை என்னும் மாநகரிலே..வளர்ந்தது பேராபட்டி என்னும் கிராமத்திலே..சிறு வயதில் இருந்தே என் அம்மா என்னை மிகவும் சிரமப்பட்டு என்னை படிக்கவைத்தார்.நான் படித்த பள்ளியில்(1-8) என்னைத்தவிர யாரும் முதல் மதிப்பெண் பெற முடியாது.நன்றாக படித்தேன்.
ஒவ்வொரு பொங்கல் தீபாவளி அன்று எனக்கு புது துணிகள் எடுத்து அவள் பழைய சேலை உடுத்துவாள்.ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்பிற்கு மாறும் போது வாங்க வேண்டிய புத்தகங்கள்,நோட்டுகள் இது வாங்குவதற்காகவே பள்ளி விடுமுறையில் நான் வேலை செய்வதை தனியாக வைத்திருக்கும்படி சொல்வாள்.
எனக்கு உடம்பு சரியில்லாமல் போனால் நான் அவளிடம் சொல்ல ரொம்ப பயப்படுவேன்..ஏனென்றால் அடுத்த நிமிடமே அவளின் கண் கலங்கிவிடும். எனக்கு என்ன என்ன பிடிக்குமோ அதைத்தான் வீட்டில் செய்வாள்.
அவள் அடிக்கடி சொல்லும் அறிவுரைகள்:
யார் கிட்டையும் கெட்டவன் என்று பெயர் என்று வாங்க கூடாது.
கஷ்டப்பட்டு வேலை செய்வதற்கு என்னைக்குமே பலன் உண்டு.
தேவையில்லாமல் செலவு செய்யக்கூடாது.
நான் என்னவள் என்றதும் பலரும் என் காதலி என்று கருதிவிட்டனர்.என் அன்னையும் என் முதல் காதலிதான்..







